Friday, November 26, 2010

மங்கையர்மலரை ஏன் விட்டுவிட்டேன்?

அது ஆச்சு ஏழு வருஷங்கள்,ம.ம.விட்டு.ஆனாலும் இன்னும் என்னைப் பார்க்கிறவர்கள்,கடிதம் எழுதுகிறவர்கள் கேட்டுக் கொண்டே இருக்கும் கேள்வி இது.அந்த அளவுக்கு என் வாழ்வில் கலந்த விட்ட ஒன்றாக ஆகிவிட்டது.
விட்ட புதுசில் சொல்லணும் என்று ஆரம்பித்திருந்தால் ஏதேதோ சொல்லியிருப்பேன்.என் மனக்குறைகளையெல்லாம் சொல்லி இருப்பேன்.சொல்வதற்கும் ஒரு வண்டி மேட்டர் இருந்தது.
ஓரிரு வருஷங்கள் கழித்துச் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தால் வேறு மாதிரி சொல்லியிருக்கலாம்.அப்போ மனம் கொஞ்சம் சமாதானமடைந்து விட்டது.
இப்போது யோசிக்கும்போது பல விஷயங்கள் தெளிவாகிறது.ஒரு காட்சியை மிக அருகில் பார்க்கும்போது அது மட்டுமே தெரியும்.கொஞ்சம் தள்ளி வைத்தால் பக்கத்தில் இருப்பவையும் தெரியும். இன்னும் கொஞ்சம்,இன்னும் கொஞ்சம் என்று தள்ளி வைத்துப் பார்த்துக்கொண்டே போனால்,அதாவது `லாங்ஷாட்` என்று சொல்வார்களே, அந்த மாதிரி பார்த்தால் முழு பின்புலமுமே புலப்படும்.அப்படித்தான் இப்போது தோன்றுகிறது.

அந்த காலகட்டம் தகவல் மீடியாவில் மிகப் பெரும் மாறுதல்களை கண்ட சமயம்.
மஹாபாரதம் முடியும் சமயம் கலியுகம் தொடங்கியதாம்.அதன் தாக்கங்களை கௌரவர்களிடமும் பார்க்கமுடிந்ததாம்.அதைப்பற்றிய பல சுவாரஸ்யமான கதைகள் உண்டு. அதைப் பிறிதொருசமயம் பகிர்ந்துகொள்கிறேன்.
அதுமாதிரி இந்த காலகட்டத்தில்தான் கொள்கை, லட்சியம் என்றெல்லாம் கனவு கண்ட இளைஞர் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போனார்கள்.யதார்த்த வாழ்வில் பணம்,பணம் அதுதான் ரொம்பவுமே முக்கியமானது என்று ஓட ஆரம்பித்த ஆண்டுகள். இது இளைஞர்களின் தவறு அல்ல.பெற்றோர்கள்,அவர்களுக்கும் காலத்தின் நிர்பந்தம்.
அனேகமாக பார்த்தால் எல்லா மீடியாக்களின் முகங்களுமே மாற ஆரம்பித்துவிட்டது.
அதற்கேற்றார் போல அங்க இருப்பவர்களும்.சோகமாகவோ,லட்சியவெறியிலேயோ தாடி வைத்த இளைஞர்கள் காணாமல் போனார்கள்.அதேபோல பெண்களும்.
இவையெல்லாம் காலத்தின் கட்டாயம்.இந்த மாறுதல்களில் எவ்வளவோ நன்மை இருக்கிறது.தீமையும் இருக்கிறது.இரண்டும் கலந்ததுதானே வாழ்க்கை?
சரி ,என் விஷயத்திற்கு வருவோம்...
நடந்தது எல்லாம் சரிதான், இதுதான் எல்லோருக்கும் நல்லது என்று தோன்றுகிறது.குறையொன்றுமில்லை கோவிந்தா... 

1 comment:

  1. கொஞ்சம் ஆறப்போட்டால் மனசு தெளிந்துவிடும். இந்த அனுபவங்கள் எனக்கும் நிறைய இருந்தது. உங்கள் வலைத்தளத்தை தமிழ் மணத்தில் இணைக்கலாமே
    http://vidyasubramaniam,blogspot.com

    ReplyDelete