Tuesday, November 30, 2010

நானும் அண்ணாமலையானும் மட்டும்...?

எட்டு வருடங்கள் தொடர்ந்து கிரிவலம் போய்க்கொண்டிருந்தேன்.அப்புறம் என்னவோ அப்பப்போ தடங்கல்கள்.இந்த கார்த்திகை தீபத்திற்கு போயேதீருவது என அடம்,ஆனால் தீபம் ஏற்றும் அன்று அல்ல.கூட்டம் நெரியும்.ரெண்டு நாள் கழிந்தால் ஆனந்தமாக தீபத்தைப் பார்த்துக் கொண்டே நடக்கலாம்.என்னை மாதிரி நிறைய பேர் வருவார்கள்.ஆனால் அப்போதும் போக முடியவில்லை.நேற்றுதான் போகமுடிந்தது.
போய் சேர்ந்தாயிற்றே தவிர மனசுக்குள் பயம்.கோயில்,ரமணாசிரமம்,பஸ்ஸ்டேண்ட்,கிருஷ்ணகிரிக்குப் பிரியும் சாலைவரை பிரச்னை இல்லை.மனிதர்கள் நடமாட்டம் இருக்கும்.அப்புறம் கிரிவலப் பாதையில் யாருமே இல்லையென்றால்...?இந்தமாதிரி சமயங்களில்தான் பெண்ணாக இருப்பதன் கஷ்டம் தெரியும்.இதுவே ஆம்பிளையாக இருந்தால் வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு போய்க்கொண்டே இருக்கலாம்.எத்தனை வயதானால் என்ன,பெண் தனியாகப் போவதற்கு யோசிக்க வேண்டியதாகத்தான் உள்ளது.
இப்படியெல்லாம் சிந்தித்துக்கொண்டு போனேன்.எனக்குள் ஒரு குரல்...`அண்ணாமலையானே உன் பக்கத்தில் முழுவதும் இருப்பான்.நீயும் அண்ணாமலையானும் மட்டும்!அவன் அருள் மொத்தம் உனக்கே!இது மாதிரி கிடைக்குமா...?அதை எஞ்சாய் பண்ணேன்,`
சரிதான்,நினைத்தாலே அற்புதமாகத்தான் இருக்கு! நானும் அவனும்,அந்த அற்புத சூழலும்!ஆனாலும் நான் அவ்வளவு பக்தை இல்லையே! த்ரௌபதியின் சேலையை இழுத்தபோது,அவள் மார்போடு சேலையைப் பிடித்துக் கொண்டிருந்தவரை கண்ணன் வரவில்லை.கையைத்தூக்கி``இதயவாசா``என சரணாகதி அடைந்தபிறகுதான் வந்தான்.அந்த மாதிரி சரணாகதிபக்தியெல்லாம் என்னிடம் ஏது?பக்கத்தில் அண்ணாமலையே இருந்தபோதும் நான் சென்ற காரை ஆங்காங்கே பாயிண்ஸில் வந்து இருக்கச் சொல்லிவிட்டுத்தான் கிளம்பினேன்.
ஆனால்...
ஆங்காங்கே ஒருசிலர் நடந்துகொண்டுதான் இருந்தார்கள்.பஸ்களும்,லாரிகளும் போய்க்கொண்டு இருந்தன.ஸோ,மனித நடமாட்டம் இருந்தது.அதேசமயம் நிறையபேரும் இல்லை,துணைக்கு,கண்பார்வைக்கு மட்டும்  மனிதர்கள்!இப்படித்தான் மனம் விரும்புகிறது.
சரியாக ஆறு மணிக்கு மலையுச்சியில் தீபம் தெரிந்தது.ஆஹா,என்ன காட்சி!நான் ஆஞ்சனேயர் கோயிலருகே போய்க்கொண்டிருந்தபோது தீபதரிசனம்...அப்படியே விழுந்துவணங்கினேன்.அப்புறம் ``அருணாசலசிவ,அருணாசலசிவ...``என்று சத்தமாக பாடிக்கொண்டே ந்டநதேன்...ஆங்காங்கே எங்கோ சில பேர்தானே,அதனால் ஆனந்தமாக பாட முடிந்தது.ஆனந்த அனுபவம்தான் போங்கள்...யார் இருப்பார்களோ,மாட்டார்களோ என்ற பயமெல்லாவற்றையும் போக்கி ஆனந்தத்தை அளித்துவிட்டான் அண்ணாமலை...

3 comments:

  1. Migavum koduthu vaithavar neengal

    ReplyDelete
  2. இறைமையின் அருகாமையில் ஏது தனிமை? எப்படி இருக்கிறீர்கள்?
    http://vidyasubramaniam.blogspot.com

    ReplyDelete