Tuesday, December 28, 2010

தைக்கவும் முடியாததால் முடிச்சுப் போட்டு உடுத்திய சேலை...

நாம ஏதாவது சாதிக்கமுடியாமல் போகும்போது அல்லது மற்றவர்கள் சாதிப்பதைப் பார்க்கும்போது பெருமூச்சு விடுகிறோம்.`ம்...அவங்களுக்கு பின்னாடி பெரிய ஆளுங்க இருக்காங்க ஊக்கப்படுத்தறதுக்கு..பணபலம் இருக்கு...எனக்கு யார் இருக்கா?என் திறமையெல்லாம் வேஸ்ட்டாபோச்சு,ஏன்னா எனக்கு பெரிய `பேக்ரவுண்ட்`இல்லை...இப்படித்தான் புலம்புவோம்...
கணவனை இழந்த ஒரு இளம்பெண்.கோயில் பூசாரியாக இருந்த அந்தக் கணவன் இறந்தபிறகு அவருக்குக் கொடுத்துக்கொண்டிருந்த சம்பளத்தில் சிறியபகுதியைக்கூட,கருணை அடிப்படையில்கூட அவளுக்குக் கொடுக்கக்கூடாது எனச்சொல்லிய கணவரின் சகோதரன்!அவள் தன் கணவனின் கிராமத்திற்குச் சென்று,அவருடைய பழைய வீட்டில் வாழத்தொடங்குகிறாள்.கணவனுக்குக் கொடுத்த வாக்கின் காரணமாக கைம்பெண் கோலத்தையும் கொள்ளவில்லை. (இது ஏதோ சினிமா கதையல்ல.உண்மையில் நடந்தது.)
கிராமத்தில் இவள்தான் பேசக்கூடிய சுவாரஸ்யமான சப்ஜெக்ட்.எல்லோரும் இவளை தூற்றுகிறார்கள்,இப்படிக்கூட ஒருத்தி வெட்கம் கெட்டு இருப்பாளா என்று...இவள் சாப்பிட்டாளா,இவள் சாப்பாட்டுக்கு என்ன செய்வாள்...இதைப்பற்றியெல்லாம் அங்கு யாருக்கும் கவலையில்லை.இப்படித்தான் அவள் வாழ்ந்தாள்.ஒன்றல்ல,இரண்டல்ல...பதிமூன்று ஆண்டுகள்!முதல் சில வருடங்கள் வெறும் சாதம் மட்டுமே...பிறகு சில கீரைகளை நட்டு அவற்றைக் கடைந்து சாதத்தோடு சேர்த்து...!
சாப்பாட்டுக்கே இந்த கதியென்றால் உடுத்தும் துணி பற்றி எங்கே சிந்திப்பது?சேலை கிழிந்து போனால் தைத்து அணிவார்கள்.ஆனால் தைக்கவே முடியாத அளவு நைந்து போனால் அந்த சமயத்தில்தான் கிழிந்த இடங்களை முடிச்சுப் போட்டு உடுத்துவார்கள்.அந்தப் பரிதாப நிலையில்தான் அவள் இருந்தாள்.
இது போதாது என்று ஒருமுறை அந்த இளம்பெண்ணை ஒருவன் துரத்தினான்.வீட்டுக்குள்ளே ஓடிஓடி சலித்துப்போன அவள் ஒரு நிலையில் ஆவேசமாகி அவனை இழுத்து அறைந்து தள்ளிவிட்டாள்.அவன் ஓடியே போய்விட்டான்...
அந்தப் பெண்ணுக்கு எழுதப்படிக்கவும் தெரியாது.
இந்த நிலையில் சாதாரணமாக ஒரு பெண் என்ன செய்வாள்? நடுவழியில் தன்னைவிட்டுவிட்டுப்போன கணவனைத் தூற்றுவாள்.தன்னை ஆதரிக்காத கணவன் வீட்டு மனிதர்களை உண்டு இல்லையென்று ஆக்குவாள்..
அவள் இதை எதையுமே செய்யாதது மட்டுமல்ல,அவள் எப்படி வறுமையில் வாழ்கிறாள் என்பதை யாருக்கும் சொல்லாமலே வாழ்கிறாள்!
ஆண்டுகள் செல்கின்றன. அவளின் நிலை அவளுடைய கணவரின் சீடர்களுக்குத் தெரிய வருகிறது.(அவர்களும் என்ன சாதாரண நிலைதான்.)
அவர்கள் வந்து அவளைக் கூட்டிச்செல்கிறார்கள்.போன இடத்திலும் இருக்கும் இடம் தெரியாமல்தான் வாழ்கிறார்.
அவருக்கென்று ஒரு நோக்கும் இருந்தது.அதை நிறைவேற்ற வேண்டும் என்ற தீவிரம் இருந்தது.அதைக் கடைசியில் நிறைவேற்றியே விட்டார்.அந்த நோக்கம் சாதாரண நோக்கம் அல்ல. அது இன்று எப்படி பரிணமித்து இருக்கிறது தெரியுமா?ஆயிரக்கணக்கான,தங்கள் வாழ்க்கையையே அந்த நோக்கத்திற்காக அர்ப்பணித்துக்கொண்ட தொண்டர்கள்!உலகம் முழுவதும்!! லட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து தங்கள் துயரங்களை தீர்த்துக் கொள்கிறார்கள்.துயர்பட்ட மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் முதலாவதாக அவர்கள் துயர் துடைக்க இவர்கள் இருப்பார்கள். உலகம் முழுவதும் இவர்களை மிக மரியாதையுடன் பார்க்கிறார்கள்.
அப்பேர்ப்பட்ட இயக்கம் தொடங்கக் காரணமாக இருந்தார் அந்தப் பெண்மணி!அதனால்தான்  `சங்க ஜனனி` (சங்கத்தைத் தொடங்கியவர் என்று அர்த்தம்) என்று அவரை அவ்வியக்கத்தினர் கொண்டாடுவர்...
ஆம்,அந்த இயக்கமே இராமகிருஷ்ணமடமாகத் துவங்கி இன்று உலகம் முழுக்கப் பரவியுள்ளது.அதில் மிகப்படித்த,ஞானத்தின் உறைவிடமாக உள்ள எத்தனை பேர் உள்ளனர்.ஆனால் அத்தனை பேரும் கொண்டாடுவது நாம் இத்தனை நேரம் பார்த்த அந்தப் பெண்மணியைத்தான்!
ஆம்..அவர்  அன்னை சாரதாதேவி...
எப்பேர்ப்பட்ட சாதனையைச் செய்திருக்கிறார்..
இன்று ஒன்றும்  இல்லாததெற்கெல்லாம் புலம்பும் ஆண்,பெண்ணெல்லாம் சாரதையின் சரிதத்தைப் படிக்கவேண்டும்...0 லெவலிலிருந்து எவ்வளவு பெரிய சாதனையையும் செய்யமுடியும் என்பதற்கு அவரே உதாரணம்...

Friday, December 10, 2010

நான் சைக்கிள் கத்துக்கிறேன்...!

இது ஒரு பெரிய விஷயமா சொல்லவந்திட்டீங்களாக்கும் என்கிறீர்களா...?அவங்க அவங்க ராக்கெட்டே வுடறாங்க,ஹக்காவ் என்று எண்ணம் ஓடுதா...?இப்போ கத்துக்கணும்னு தோணிச்சே அதுக்குப் பாராட்டுங்க...
நான் சின்னவளாக இருந்தபோது ``சைக்கிள் எல்லாம் ரவுடிப்பசங்கள்தான் விடுவார்கள்``என்பார்கள்.பையன்களே வீட்டுக்குத் தெரியாமல்தான் கற்றுக் கொள்வார்கள்!அப்புறம் நான் எங்கே கற்றுக்கொள்வது?
அப்புறம் என் பெண் கற்றுக்கொண்டதும்,எப்போ பார்த்தாலும் அந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு ரோடு சுத்தியதும்,ஒரு முறை மாடு துரத்த சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு பயந்து ஓடி வர, நான் வேறு,``இனிமே சைக்கிளை எடுத்துக்கொண்டு சுத்துவியா,சுத்துவியா..``என கம்பால் சாத்த...பாவம் அந்தக் குழந்தை.இப்போது நினைக்கும்போது பாவமாக இருக்கிறது.அந்த வயதில் வேலைகளின் டென்ஷனில் குழந்தைகளின் குறும்புக்கு நாலு சாத்து சாத்தத்தான் தோன்றுகிறது.அப்புறம் அவள் +2விலிருந்து ஜோராக` கைனடிக் ஹோண்டா` எடுத்துக்கொண்டு பறந்தாள்.எவ்வளவு சவுகரியம்!
பிறகு ஒரு முறை சைக்கிள் ஆசை வந்தது,அப்பவும்,``நீ சைக்கிள் கற்றுக்கொண்டு என்ன செய்யப்போறே...?கார்தான் ஜோரா விடறே..அது போதாதா..?என்று என் ஆசையை இழுத்து மூடிவிட்டார்கள்.
இப்போது என் பேத்திக்காக ஒரு சைக்கிள் வாங்கினார் என் கணவர்.அதாவது ஊரிலிருந்து வந்த அவள் நேராக அவரிடம் போய்,``வாங்க தாத்தா,நாம போய் சைக்கிள் செலக்ட் பண்ணலாம்...!``என்றாள். அவரும் மறுபேச்சு பேசாமல் உடனே போய் சைக்கிள் வாங்கிக் கொடுத்துவிட்டார்! ரவுடிகள் விடும் வண்டி என்று சொல்லப்பட்ட காலம் எங்கே,குழந்தைகள் சொல்படி அவர்கள் பின்னாடியே பெரியவர்கள் போகும் இப்போதைய காலம் எங்கே...?
அவள் வாங்கி வைத்துவிட்டுப்போன சைக்கிள் இன்னும் ஊருக்குப் `பேக்`ஆகிப்போகவில்லை.அதைப்பார்க்கும்போதெல்லாம் என் மனதில் மீண்டும் சைக்கிள் ஆசை துளிர்த்தது!அவரிடம் எனக்கு ஒரு சைக்கிள் வாங்கிக்கொடுங்களேன் என தொணப்ப ஆரம்பித்தேன்.
அதற்கு முன் சைக்கிள் கற்றுக்கொள்ளவேண்டுமே!பக்கத்து வீட்டுப்பெண்ணிடம் ஓசியில் வாங்கிக் கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டேன்!என் குரு என் மருமகள்! இப்போது ,நாங்கள் இருவரும் ரோடில்!
சைக்கிள் கற்றுக்கொள்ளும்போது ஒரு சூப்பர் தத்துவம்...
``சைக்கிளில் பேலன்ஸ் வரும்வரை நம் உடல் பாரம் பூரா நம் மேலேதான் சுமக்கிறோம்.எந்தப்புள்ளியில் பேலன்ஸ் என்று தெரிந்து கொண்டுவிட்டால் பாரம் தெரியாமல் காற்றாக சவாரி செய்யலாம்.பேலன்ஸ் பண்ண வரவில்லையென்றால் கீழே விழவேண்டியதுதான்!...``
எப்பூடி தத்துவம்?                                                 (தத்துவ உபயம்....ஐஸ்வர்யா)

`அறிவே` இல்லை மூளைக்கு!

தலைப்பு வேடிக்கையா இருக்கு இல்லே?ஒரு சில சமயங்களில் மூளை அப்படித்தான் நடந்து கொள்கிறது! ஒரு நிகழ்ச்சி எப்பவோ நடந்தது என்று வைத்துக்கொள்வோம்,அதைப்பற்றி நினைக்கிறோம்,அந்த சமயத்தில் நமக்கு என்ன உணர்வு இருந்ததோ அதே உணர்வு மீண்டும் ஏற்படுகிறது.யாரோ ஒருவர் ந்ம்மை அவமதித்திருப்பார்,மனம் வேதனையில் தத்தளித்திருக்கும்...இவரா,இவரா இப்படி என்று மனதில் வேதனை பிடுங்கித் தின்னும்.வயிற்றில் சங்கடம் புரட்டும்...அமிலங்கள் சுரக்கும்...
இந்த நிகழ்ச்சியை ஒரு வருடம் கழித்து நினைத்துப் பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்...நீங்கள் எத்தனை தீவிரமாக அதைப்பற்றி நினைக்கிறீர்களோ அந்த அளவிற்கு பழைய நாளில் என்ன உணர்வுகள் ஏற்பட்டதோ அதே உணர்வுகள்,வயிற்றுச்சங்கடம்...புரட்டல்...அதே,அதே...
மூளைக்குத் தெரியாது இப்போது உண்மையில் அந்த சம்பவம் நடக்கவில்லை என்று! மனம் அந்தமாதிரி நினைக்கவும் அதற்கேற்றார் போல ஹார்மோன்களைச் சுரக்கிறது...நம் மனம் என்ன சொல்கிறதோ அதை சிம்பிளாக செய்துவிடுகிறது மூளை! அதனால்தான் சொன்னேன்,அறிவே இல்லாத மூளை என்று.
ஒரு திரைப்படத்தில் ரேவதி சொல்வார்,``அவர்கள் ஒரு முறைதான் கற்பழித்தார்கள்.ஆனால் பத்திரிக்கைகாரர்களும்,இந்த கோர்ட்டிலும் அதைப்பற்றிப் பேசிப்பேசியே தினம்தினம் கற்பழித்துக் கொண்டிருக்கிறார்கள்`` என்று.
அது போலத்தான் நமக்கு அவமானங்களும்,துரோகங்களும் ஒரு முறைதான் ந்டைபெறுகிறது.ஆனால் நம் மனதால் அதை மீண்டும் மீண்டும் நினைக்கும்போது மூளை அதே ஹார்மோன்களைச் சுரக்க,சுரக்க நம் உடம்புதான் பாழாகிறது.
மறக்கமுடியவில்லையே என்கிறீர்களா,அதனால் நாம்தான் நமக்கு துரோகம் செய்துகொள்கிறோம்.அவர்கள் ஒருமுறைதான் செய்தார்கள்!ஆனால் நாம் மீண்டும்,மீண்டும் நமக்குச் செய்து கொள்வதால் உடம்புவலி,தலைவலி எல்லாம் வருவதை உணரலாம்...டெஸ்ட்டுக்கு வேண்டுமானால் ஒன்றை நினைத்துப்பாருங்கள்,நம் மூளைக்கு எத்தனை அறிவில்லை என்பது அப்போது புரியும்.
இதையே பாஸிட்டிவாக மாற்றலாம்.ஒரு நல்ல ஜோக்,நல்லநிகழ்ச்சி இப்படி நினைத்துப் பாருங்களேன்,அப்பவும் மூளை அதேமாதிரி நல்ல ஹார்மோன்களை சுரக்கும்...அதற்கு ஒன்றும் தெரியாது,மனம் சொல்லும்படி ஆடும் குரங்கு அது!