Friday, December 10, 2010

நான் சைக்கிள் கத்துக்கிறேன்...!

இது ஒரு பெரிய விஷயமா சொல்லவந்திட்டீங்களாக்கும் என்கிறீர்களா...?அவங்க அவங்க ராக்கெட்டே வுடறாங்க,ஹக்காவ் என்று எண்ணம் ஓடுதா...?இப்போ கத்துக்கணும்னு தோணிச்சே அதுக்குப் பாராட்டுங்க...
நான் சின்னவளாக இருந்தபோது ``சைக்கிள் எல்லாம் ரவுடிப்பசங்கள்தான் விடுவார்கள்``என்பார்கள்.பையன்களே வீட்டுக்குத் தெரியாமல்தான் கற்றுக் கொள்வார்கள்!அப்புறம் நான் எங்கே கற்றுக்கொள்வது?
அப்புறம் என் பெண் கற்றுக்கொண்டதும்,எப்போ பார்த்தாலும் அந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு ரோடு சுத்தியதும்,ஒரு முறை மாடு துரத்த சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு பயந்து ஓடி வர, நான் வேறு,``இனிமே சைக்கிளை எடுத்துக்கொண்டு சுத்துவியா,சுத்துவியா..``என கம்பால் சாத்த...பாவம் அந்தக் குழந்தை.இப்போது நினைக்கும்போது பாவமாக இருக்கிறது.அந்த வயதில் வேலைகளின் டென்ஷனில் குழந்தைகளின் குறும்புக்கு நாலு சாத்து சாத்தத்தான் தோன்றுகிறது.அப்புறம் அவள் +2விலிருந்து ஜோராக` கைனடிக் ஹோண்டா` எடுத்துக்கொண்டு பறந்தாள்.எவ்வளவு சவுகரியம்!
பிறகு ஒரு முறை சைக்கிள் ஆசை வந்தது,அப்பவும்,``நீ சைக்கிள் கற்றுக்கொண்டு என்ன செய்யப்போறே...?கார்தான் ஜோரா விடறே..அது போதாதா..?என்று என் ஆசையை இழுத்து மூடிவிட்டார்கள்.
இப்போது என் பேத்திக்காக ஒரு சைக்கிள் வாங்கினார் என் கணவர்.அதாவது ஊரிலிருந்து வந்த அவள் நேராக அவரிடம் போய்,``வாங்க தாத்தா,நாம போய் சைக்கிள் செலக்ட் பண்ணலாம்...!``என்றாள். அவரும் மறுபேச்சு பேசாமல் உடனே போய் சைக்கிள் வாங்கிக் கொடுத்துவிட்டார்! ரவுடிகள் விடும் வண்டி என்று சொல்லப்பட்ட காலம் எங்கே,குழந்தைகள் சொல்படி அவர்கள் பின்னாடியே பெரியவர்கள் போகும் இப்போதைய காலம் எங்கே...?
அவள் வாங்கி வைத்துவிட்டுப்போன சைக்கிள் இன்னும் ஊருக்குப் `பேக்`ஆகிப்போகவில்லை.அதைப்பார்க்கும்போதெல்லாம் என் மனதில் மீண்டும் சைக்கிள் ஆசை துளிர்த்தது!அவரிடம் எனக்கு ஒரு சைக்கிள் வாங்கிக்கொடுங்களேன் என தொணப்ப ஆரம்பித்தேன்.
அதற்கு முன் சைக்கிள் கற்றுக்கொள்ளவேண்டுமே!பக்கத்து வீட்டுப்பெண்ணிடம் ஓசியில் வாங்கிக் கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டேன்!என் குரு என் மருமகள்! இப்போது ,நாங்கள் இருவரும் ரோடில்!
சைக்கிள் கற்றுக்கொள்ளும்போது ஒரு சூப்பர் தத்துவம்...
``சைக்கிளில் பேலன்ஸ் வரும்வரை நம் உடல் பாரம் பூரா நம் மேலேதான் சுமக்கிறோம்.எந்தப்புள்ளியில் பேலன்ஸ் என்று தெரிந்து கொண்டுவிட்டால் பாரம் தெரியாமல் காற்றாக சவாரி செய்யலாம்.பேலன்ஸ் பண்ண வரவில்லையென்றால் கீழே விழவேண்டியதுதான்!...``
எப்பூடி தத்துவம்?                                                 (தத்துவ உபயம்....ஐஸ்வர்யா)

1 comment:

  1. ஐயோ இதை படித்தவுடன் என் அண்ணா எனக்கு எப்படி திட்டி திட்டி சைக்கிள் கத்து தந்தான் என்பது ஞாபகத்தில் வருகிறது. ஆனால் ஒன்று தெரியுமா விழாமல் சைக்கிள் கற்றுக்கொண்டவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு ஏதானும் மெடல் தரலாம்.
    பானு சுப்ரமணியன்

    ReplyDelete