Tuesday, December 28, 2010

தைக்கவும் முடியாததால் முடிச்சுப் போட்டு உடுத்திய சேலை...

நாம ஏதாவது சாதிக்கமுடியாமல் போகும்போது அல்லது மற்றவர்கள் சாதிப்பதைப் பார்க்கும்போது பெருமூச்சு விடுகிறோம்.`ம்...அவங்களுக்கு பின்னாடி பெரிய ஆளுங்க இருக்காங்க ஊக்கப்படுத்தறதுக்கு..பணபலம் இருக்கு...எனக்கு யார் இருக்கா?என் திறமையெல்லாம் வேஸ்ட்டாபோச்சு,ஏன்னா எனக்கு பெரிய `பேக்ரவுண்ட்`இல்லை...இப்படித்தான் புலம்புவோம்...
கணவனை இழந்த ஒரு இளம்பெண்.கோயில் பூசாரியாக இருந்த அந்தக் கணவன் இறந்தபிறகு அவருக்குக் கொடுத்துக்கொண்டிருந்த சம்பளத்தில் சிறியபகுதியைக்கூட,கருணை அடிப்படையில்கூட அவளுக்குக் கொடுக்கக்கூடாது எனச்சொல்லிய கணவரின் சகோதரன்!அவள் தன் கணவனின் கிராமத்திற்குச் சென்று,அவருடைய பழைய வீட்டில் வாழத்தொடங்குகிறாள்.கணவனுக்குக் கொடுத்த வாக்கின் காரணமாக கைம்பெண் கோலத்தையும் கொள்ளவில்லை. (இது ஏதோ சினிமா கதையல்ல.உண்மையில் நடந்தது.)
கிராமத்தில் இவள்தான் பேசக்கூடிய சுவாரஸ்யமான சப்ஜெக்ட்.எல்லோரும் இவளை தூற்றுகிறார்கள்,இப்படிக்கூட ஒருத்தி வெட்கம் கெட்டு இருப்பாளா என்று...இவள் சாப்பிட்டாளா,இவள் சாப்பாட்டுக்கு என்ன செய்வாள்...இதைப்பற்றியெல்லாம் அங்கு யாருக்கும் கவலையில்லை.இப்படித்தான் அவள் வாழ்ந்தாள்.ஒன்றல்ல,இரண்டல்ல...பதிமூன்று ஆண்டுகள்!முதல் சில வருடங்கள் வெறும் சாதம் மட்டுமே...பிறகு சில கீரைகளை நட்டு அவற்றைக் கடைந்து சாதத்தோடு சேர்த்து...!
சாப்பாட்டுக்கே இந்த கதியென்றால் உடுத்தும் துணி பற்றி எங்கே சிந்திப்பது?சேலை கிழிந்து போனால் தைத்து அணிவார்கள்.ஆனால் தைக்கவே முடியாத அளவு நைந்து போனால் அந்த சமயத்தில்தான் கிழிந்த இடங்களை முடிச்சுப் போட்டு உடுத்துவார்கள்.அந்தப் பரிதாப நிலையில்தான் அவள் இருந்தாள்.
இது போதாது என்று ஒருமுறை அந்த இளம்பெண்ணை ஒருவன் துரத்தினான்.வீட்டுக்குள்ளே ஓடிஓடி சலித்துப்போன அவள் ஒரு நிலையில் ஆவேசமாகி அவனை இழுத்து அறைந்து தள்ளிவிட்டாள்.அவன் ஓடியே போய்விட்டான்...
அந்தப் பெண்ணுக்கு எழுதப்படிக்கவும் தெரியாது.
இந்த நிலையில் சாதாரணமாக ஒரு பெண் என்ன செய்வாள்? நடுவழியில் தன்னைவிட்டுவிட்டுப்போன கணவனைத் தூற்றுவாள்.தன்னை ஆதரிக்காத கணவன் வீட்டு மனிதர்களை உண்டு இல்லையென்று ஆக்குவாள்..
அவள் இதை எதையுமே செய்யாதது மட்டுமல்ல,அவள் எப்படி வறுமையில் வாழ்கிறாள் என்பதை யாருக்கும் சொல்லாமலே வாழ்கிறாள்!
ஆண்டுகள் செல்கின்றன. அவளின் நிலை அவளுடைய கணவரின் சீடர்களுக்குத் தெரிய வருகிறது.(அவர்களும் என்ன சாதாரண நிலைதான்.)
அவர்கள் வந்து அவளைக் கூட்டிச்செல்கிறார்கள்.போன இடத்திலும் இருக்கும் இடம் தெரியாமல்தான் வாழ்கிறார்.
அவருக்கென்று ஒரு நோக்கும் இருந்தது.அதை நிறைவேற்ற வேண்டும் என்ற தீவிரம் இருந்தது.அதைக் கடைசியில் நிறைவேற்றியே விட்டார்.அந்த நோக்கம் சாதாரண நோக்கம் அல்ல. அது இன்று எப்படி பரிணமித்து இருக்கிறது தெரியுமா?ஆயிரக்கணக்கான,தங்கள் வாழ்க்கையையே அந்த நோக்கத்திற்காக அர்ப்பணித்துக்கொண்ட தொண்டர்கள்!உலகம் முழுவதும்!! லட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து தங்கள் துயரங்களை தீர்த்துக் கொள்கிறார்கள்.துயர்பட்ட மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் முதலாவதாக அவர்கள் துயர் துடைக்க இவர்கள் இருப்பார்கள். உலகம் முழுவதும் இவர்களை மிக மரியாதையுடன் பார்க்கிறார்கள்.
அப்பேர்ப்பட்ட இயக்கம் தொடங்கக் காரணமாக இருந்தார் அந்தப் பெண்மணி!அதனால்தான்  `சங்க ஜனனி` (சங்கத்தைத் தொடங்கியவர் என்று அர்த்தம்) என்று அவரை அவ்வியக்கத்தினர் கொண்டாடுவர்...
ஆம்,அந்த இயக்கமே இராமகிருஷ்ணமடமாகத் துவங்கி இன்று உலகம் முழுக்கப் பரவியுள்ளது.அதில் மிகப்படித்த,ஞானத்தின் உறைவிடமாக உள்ள எத்தனை பேர் உள்ளனர்.ஆனால் அத்தனை பேரும் கொண்டாடுவது நாம் இத்தனை நேரம் பார்த்த அந்தப் பெண்மணியைத்தான்!
ஆம்..அவர்  அன்னை சாரதாதேவி...
எப்பேர்ப்பட்ட சாதனையைச் செய்திருக்கிறார்..
இன்று ஒன்றும்  இல்லாததெற்கெல்லாம் புலம்பும் ஆண்,பெண்ணெல்லாம் சாரதையின் சரிதத்தைப் படிக்கவேண்டும்...0 லெவலிலிருந்து எவ்வளவு பெரிய சாதனையையும் செய்யமுடியும் என்பதற்கு அவரே உதாரணம்...

2 comments:

  1. i have read the editorial of the recent snehithi; 100% true. where are we going? in recent times, i have observed that no magazine contains stories, but only one-page story or incident. have people lost patience?

    ReplyDelete
  2. முதலில் சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் வேண்டும். பிறகு உறுதி, விடாமுயற்சி மற்றும் துணிவு வேண்டும். இதற்க்கு எவ்வளவு பேர் தயாராக இருக்கிறார்கள்? இப்போது அநேகமாக எல்லோருமே ஒருவிதத்தில் தான் தனக்கு என்று மட்டும் தானே இருக்கிறார்கள்.

    ReplyDelete