Tuesday, February 26, 2013

தொடர்கதையா...சிறுகதையா...

2002-ல் ஒரு திருமணம்,2010-ல் ஒரு திருமணம்...இந்த இடைப்பட்ட எட்டு ஆண்டுகளில் உலகம் எப்படி மாறியிருக்கிறது என்பதை உறவினர்களின் நடவடிக்கைகளிலிருந்தே புரிந்துகொள்ளமுடிந்தது!அந்த காலகட்டம்தான் ஐ.டி.இண்டஸ்ட்ரி நம் நாட்டில் கால்பதித்த நேரம்...

முதல் கல்யாணத்தில் உறவினர்களின் அந்யோன்யம்,நெஞ்சை நெகிழவைக்கும் ஒத்துழைப்பு...அது ஒரு மறக்க முடியாத அற்புதமான சங்கமம்...அடுத்த எட்டாவது ஆண்டில் நடந்த திருமணத்தில் பலரின் நடவடிக்கைகள் திகைக்க வைத்தது.

அழைப்பு வைக்க ஆரம்பித்த நாளிலிருந்தே இந்த வித்தியாசம் நன்கு தெரிந்தது.மனிதர்களின் மனம் எப்படியெல்லாம் மாறிவருகிறது.டி.வி.பார்த்துக்கொண்டே பதில் சொல்பவர்கள்,யார் யார் எல்லாம் அமெரிக்க விஜயகர்த்தாக்கள்,இந்த இடைப்பட்ட நாட்களில் அவர்கள் வீட்டுத் திருமணத்திற்குப் போனது போகாதது கணக்கெடுப்பு ,என்ன மொய்,எந்தக் காரில் வ்ந்திருக்கிறார்கள்,நம் வீட்டில் யாராவது ஐ.டி.,யில் வேலை... அமெரிக்கா போயிருக்கிறார்களா,...இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...

-இது ஏதோ ஒருவரின் கதையல்ல...நம் நாட்டில் அநேகம் பேருக்கு இந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும்.பி.ஈ.,எம்.பி.ஏ. என முடித்து விட்டு இலட்சத்தில் சம்பாதிக்கிறார்கள்.நல்லதுதான். ஆனால் அந்தப் பணம் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறது! குழந்தைகளையும் கூட என்பதுதான் கொடுமை.உறவினர்களை கூப்பிட்டு வைத்து ஒரு ஃப்ங்ஷன் நடத்த வேண்டும் என்றாலே அலறுகிறார்கள். காரணம் அந்த அளவிற்கு கசப்பான அனுபவங்கள்.

``உறவுகள் தொடர்கதை...’’என ஒரு பாட்டு உண்டு...இப்போது எல்லோரும் சிறுகதையாக முடித்துக்கொள்ளவே விரும்புகிறார்கள்!

Monday, February 25, 2013

குரலுக்குப் பின்னால்...

இன்னொரு வி.ஐ.பி.யின் மறுபக்கம்...இவர்கள் எல்லோரும் நிகழ்ச்சி நடத்த அமெரிக்கா போயிருக்காங்க...ரொம்ப சுவாரஸ்யமாக பண்ணுவார் என்பதற்காக அந்த தொகுப்பாளரை அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்கள்.நிகழ்ச்சி பங்கேற்பாளர்களில் ஒருத்தர் `நைஸாக` இவரை   ஓரம்கட்டி,என்ன பேசப்போகிறார் என்று கேட்டிருக்கிறார்.இவர் பாவம் அப்பாவியாக சொல்ல.அதை அப்படியே கொண்டுபோய் மெயின் ஆளிடம் போட்டுக்கொடுத்து,``ஆமாம்...இது உங்க ப்ரோக்ராமா...அவர்தா...’’என்று வேறு ஊதியிருக்கிறார்.ஏற்கெனெவே``மூடு’’மாறும் `அவர்’ தொகுப்பாளரை அழைத்து,``நீ அடுத்து இவர் பாடுவார்’’ அப்படின்னு சொன்னா போதும்’’ என்று சொல்லிவிட்டார்!

என்ன மனுஷங்க...அதற்கப்புறம் அந்தப் போட்டுக் கொடுத்த மனிதரின் உருகி உருகிப் பாடும் குரல் எனக்குப் பிடிக்காமல் போய்விட்டது...

Sunday, February 24, 2013

பெண்கள் உரிமையாம்...

ஃபேஸ்புக்கில் சில வி.ஐ.பி.க்களைப் பற்றி அவர்களை புத்தகத்தில் மட்டுமே அறிந்தவர்கள் ``ஆஹா...ஓஹோ...’’ என்று எழதும்போது சிரிப்பாகவரும்.ஒருத்தரைப் பற்றி மட்டும்...

பெண்கள் தினத்துக்காக அந்தப் பெண்ணைப் பேசச்சொல்லலாம் என நினைத்தேன்.மிக அமைதியான,இனிமையான பெண்மணி...ரொம்ப நல்லமாதிரி.என் பெண் பிறந்த அதே நாளில்தான் அவருக்கும் குழந்தை அதே ஆஸ்பத்திரியில் பிறந்தது.அப்போதெல்லாம் அங்கே வந்து வந்து நிற்கும் கணவனை நர்ஸ்கள் திட்டி தீர்ப்பார்கள்...``தடிமாடு மாதிரி வந்து நிற்கறான்.வேற பொம்பளைய அனுப்பினா என்ன’’ என்று.அப்போது அவர்களுக்கு யாரும் இல்லை...அது ஒரு காலம்...

சரி...அவரைக் கூப்பிட ஃபோன் செய்தேனா...ஃபோனை எடுத்த அவரிடம் விஷயத்தைச் சொன்னவுடன் சீறித்தீர்த்து விட்டார்``பெண்கள் உரிமையாவது,சுதந்திரமாவது..அதெல்லம் என்னால் வரமுடியாது’’

எனக்கு ஆச்சர்யம்,இந்த இனிமையான பெண்ணா இப்படிப் பேசுகிறார் என்று...விட்டுவிட்டேன்...ஒரு மணி நேரம் கழித்து அவரே கூப்பிட்டார்...``ஸாரி..மஞ்சுளா...நான் அந்த நேரத்தில ரொம்ப விரக்தியில் இருந்தேன்...மன்னிச்சுக்கங்க...’’என்றார்.``பரவாயில்லைம்மா...’’என்றேன்

அடிக்கடி அவரைப் பற்றி நினைத்துக் கொள்வேன்,எத்தனை. திறமை வாய்ந்த பெண்மணி என்று...அவர் கணவர் பெண்ணுரிமைப் பற்றியெல்லாம் ரொம்பப் பிரமாதமாகப் பேசுவார்...! 

Saturday, February 23, 2013

எப்படித் தூங்கமுடிகிறது?

ஏதாவது இடர்ப்பாடோ,கஷ்டமோ வரும்போது இப்பல்லாம் உடனே,`இலங்கையில் அவர்கள் பட்ட\படும் கஷ்டங்களை விடவா ’என மனசு எண்ணுகிறது.இலங்கையில் என்றில்லை உலகில் எங்கும் கொடூரமான தாக்குதல்களை நடத்துகிறார்கள்....ஆசிட் வீச்சு உட்பட...

எனக்கு எப்போதும் தோன்றும்...இவர்களிப்படிச் செய்கிறார்களே...அப்புறமாக அதைப்பற்றி நினைத்து வருத்தம் ஏற்படாதா?ஒரு உயிரை துடிக்கத் துடிக்கக் கொடுமைப் படுத்துகிறார்களே...அந்த உயிரின் கத்தலும்,கதறலும் அவர்களின்காதுகளை,கண்களை விட்டு எப்படி நீங்குகிறது?எப்படி அவர்களால் இரவு தூங்கமுடிகிறது?

என்னால் அந்தப் புகைப்படங்களைக் கூட பார்க்கமுடிவதில்லை...எப்போதும் என் மனதில் ஒரு துயரம்,அந்தக் கண்ணீர்த்துளி தேசத்தின் அப்பாவிப்பெண்களின் நிர்க்கதியான நிலயை நினைத்து...

``சை”யா...``சையா...”

விளம்பரங்கள் என்றால் சின்னதாக புன்முறுவல் பூக்கவைப்பதாக இருக்கவேண்டும்.அதுதான் விற்பனையாளருக்கும் நல்லது.``சை...”என்று சொல்லவைத்தால் அது விளம்பரத்தின் தோல்வி.

வாக்கிங் அப்பாவோடு வந்துவிட்டு,அவருக்கு சாக்லேட் கொடுத்து ஓடவிட்டு,இவள் விசிலடித்துக் பாய்ஃப்ரெண்டை அழைப்பது...மனைவிக்கு சீரியஸ் என ஆபிஸில் சொல்லிவிட்டு ஜாலியாக அவுட்டிங் போவது...இதெல்லாம் ``சை...”ரகம்.

ஜாக்கிரதை...பெண்களின் ஆதரவை இழக்கவேண்டி வரும்...

Friday, February 22, 2013

ஏ.ஸி.பெட்டி...

பகல்நேர ரெயில் பிராயணங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.சென்றமுறை கோவையில் லேத்துப்பட்டறை வைத்திருக்கும் ஒரு பெண்மணி பேசிக்கொண்டுவந்தார்.மின்தடை பற்றிப் பேச்சு வந்தபோது,”அதுக்காக என்ன பண்றதுங்க?சமாளிக்க வேண்டியதுதான்...’’என சாதாரணமாக பேசினார்.

நேற்றைய பிராயணத்தில் bsnl-ல் வேலை பார்ப்பவர்.நேர்மையாக ஒத்துக்கொண்டார்.”இங்க பார்க்கற வேலைக்கு சம்பளம் அதிகம்தான்.எனக்கு பஸ் ட்ரைவருங்களை பார்க்கும்போதுதான் வருத்தமாக இருக்கும்.அவங்களுக்கு சம்பளம் கம்மிங்க...”என்றார்.

அவர் பேசினதில் என்னை யோசிக்க வைத்த விஷயம்...”இந்த ஏ.ஸி.பெட்டில வர்ற மனுஷங்கள்ட்ட ஒரு உயிரோட்டமே இருக்காதுங்க.கம்யூட்டர்,பேப்பர்,இல்லைன்னா தூக்கம்.ஒருத்தொருக்கொருத்தர் பேசிக்கவே மாட்டாங்க.இதுவே சாதா பெட்டியிலே ,பக்கத்துல கலகலன்னு பேச ஆரம்பிச்சுடுவாங்க.வேர்க்கடலை விற்கறவ்ங்க,புக் விக்கறவங்கன்னு ஒரே சத்தம்... முகத்தல அடிக்கற காத்துன்னு உயிர்த்துடிப்போட இருக்கும்” என்றார்.

என்ன பண்ணுவது?அந்த `செத்து’ப்போன பெட்டியில்தான் தொடர்ந்து பயணித்தோம்...