Monday, January 31, 2011

இப்படியும் ஒரு மனவலிமை...!

ஒரு ஊர்ல ஒரு ஸ்கூல் பொண்ணு...நகரம் இல்ல,கிராமம்தேன்...+1-ஆம்...ஏதோ வயத்துவலி,வயத்துவலின்னு அடிக்கடி சொல்லிட்டு இருந்திருக்கா...ஒருநாள் ஸ்கூல்ல ரொம்ப வலி ஜாஸ்தி ஆகிடவும்,பக்கத்துல இருந்த ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போயிருக்காங்க...அங்க பாத்ரூம்க்குப் போன புள்ள ஒரு புள்ளய பெத்துட்டு கத்தியிருக்கா...!ஏதோ சத்தம் கேக்குதேன்னு போய்ப் பாத்தவங்க அரண்டுபோய் இருக்காங்க...
மறுநாள் இது தொடர்பா இன்னொரு செய்தி...அந்த புள்ள குழந்தையோட `போஸ்` கொடுக்க ,பக்கத்துல ஒரு விடல பையன் நின்னுக்கிட்டு ``நான் இவளை கைவிடமாட்டேன்.கல்யாணம் பண்ணிப்பேன்`` அப்படீன்னு பேட்டி கொடுக்கறான்...!
இதுல கலாசாரம் ,பண்பாடு அப்படிங்கற அயிட்டமெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்...அந்தப் பெண் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும்வரை வீடு,பள்ளி என எல்லா இடங்களிலும் தன் கர்ப்பத்தை,அது சார்ந்த சிரமங்களை மறைத்திருக்கிறாள் என்றால் அவளுக்கு என்ன மனவலிமை இருக்க வேண்டும் என்றுதான் ஆச்சர்யமாக இருக்கிறது...
நாம் நினைத்தால் எந்த அளவிற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளமுடியும் என்பதற்கு இதுவே (சிறந்த உதாரணம் என்று சொல்லமாட்டேன்,கெட்ட )உதாரணம் எனலாம்.
ஏனென்றால் முதல் தாய்மை,முதல் பிரசவம் என்பதெல்லாம் உற்றம்,சுற்றம் இருந்தாலும்கூட பெண்களை பெரிய அளவில் பயமுறுத்தும்,குழப்பத்தில் ஆழ்த்தும்.ஆனால் இந்தப்பெண் கடைசிவரை யாருக்கும் தெரியாமல் மறைத்திருக்கிறாள்!
இதையே ஏன் நாம் நல்லவிதத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது?மனதில் தீர்மானம் செய்துகொண்டால் எதையும் சாதிக்கமுடியும்!
சாதிக்க நல்ல விஷயங்களை நினைப்போம்...!

Wednesday, January 5, 2011

தெய்வம் இருக்குதென்று கும்மியடி...

சென்றமாதம் கிரிவலம் போனபோது அகத்தியராஸ்மத்திற்கு அப்புறம் நடப்பது சிரமமாக இருந்தது.ஒரே சரளை கற்கள்...ஏனோ திடீரென்று ``தேகபலம் தா...பாதபலம் தா..``என்று சொல்ல ஆரம்பித்துவிட்டேன்..எப்படி தொடங்கிய இடம் வந்தேன் என்றே தெரியவில்லை.

அந்த சமயத்தில் இருந்து மீண்டும் சபரிமலைக்குப் போகவேண்டும் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது.அதென்ன`மீண்டும் சபரிமலை` என்கிறீர்களா..?அது ஒரு கதை...அப்பா ரொம்பநாளாக சபரிமலை போகிறவர்.எனக்கும் ஆசை வந்து ஐந்து வருடங்களுக்கு முன் அப்பாவிடம் சொன்னேன்.அவரும் மிக மகிழ்ச்சியோடு சரி என்று மாலை போட்டார்.ஒரு மாதத்திற்கும் மேலே ஆன பிறகு ஒரு நெருங்கிய உறவினர் இறந்து விட்டார்.மலைக்குப் போக சில நாட்களே இருந்ததால் நான் மாலையைக் கழட்டவில்லை.இறப்புக்கும் போகவில்லை.அதிலே அவர்களுக்கு என் மேல் வருத்தமும் கூட..

சரி, அடுத்த வருடம் இந்த பிரச்சனை வந்துவிடக்கூடாதே என்று ஒரு குத்துமதிப்பாக சென்றவருடம் அவர்கள் இறந்த திதியைக் கணக்கிட்டு மாலையைப் போட்டுக்கொண்டால் இரண்டாவதுநாள் போன்...நான் எந்ததேதிக்கு ஊருக்குப்போக இருந்தேனோ,அந்ததேதியில்தான் முதலாமாண்டு காரியங்கள்...அதுவும் அப்படியாச்சு...மலைக்குப்போய்விட்டு வந்துவிட்டேன்...!

அடுத்த வருடம் அப்பாவும்,என் பெரியநாத்தனாரும் ஒரேநாளில் இறக்க,....போகமுடியவில்லை...அடுத்தவருடமும் ஏதோ காரணம்...சரி ,மூன்றாவது வருடம் போய் மணிகட்டிவிட்டு வந்துவிட்டால் போதும்.அதுக்கப்புறம் ஐயப்பன் கூப்பிட்டால் பார்த்துக்கொள்ளலாம் என்று மீண்டும் விக்ரமாதித்தன் கதையாக மாலைபோட்டுக்கொண்டேன்...எந்தவித காரணமோ,கஷ்டமோ இல்லாமல் இரவு நன்றாக தயிர்சாதம் சாப்பிட்டுவிட்டு ஜம்மென்று அரட்டை அடித்துகொண்டிருந்த மாமனார் வைகுண்டஏகாதசி அன்று பரமபதம் அடைந்தார்! நான் எங்கே போவது?மாலையைக் கழற்றியாயிற்று....
அப்புறம் சபரிமலைக்குப் போவது பற்றிப் பேசவே யோசனையாக இருந்தது!இப்போது தெரிகிறதா...`மீண்டும் சபரிமலை போக ஆசை`என்று ஏன் சொன்னேன் என்று?

கிரிவலம் முடிந்து இரண்டு,மூன்று நாள் கழித்து மெதுவாக வீட்டில் சொல்லி, பர்மிஷன் வாங்கிக்கொண்டு மாலையும் போட்டுக்கொண்டுவிட்டேன் அலுவலகத்துக்கு வந்திருந்த ஜோதிடர் ஹரிப்பிரசாத்சர்மா என்னைப் பார்த்துவிட்டு தன் இரு குழந்தைகளோடு தானும் வருவதாகவும்,தனக்கு அங்கு தெரிந்தவர்கள் இருப்பதால் போய்விடலாம் என்றார்.இப்படியாக திட்டமிட்டு நாங்கள் போகத் தீர்மானித்தது ஜனவரி3,4தேதிகளில்...பேப்பரிலா ``கூட்டம் சபரிமலையில் நெரிகிறது,அள்ளுகிறது`` என வந்து கொண்டிருந்தது. தெரிந்தவர்கள் அத்தனை பேரும் இந்த தேதியிலா போகிறீர்கள்?எக்கச்சக்கமாக இருக்குமே என்று `டிஸ்கரேஜ்` செய்து கொண்டிருந்தார்கள்.அது உண்மையும் கூட.தரிசனத்திற்கு 20மணிநேரம் ஆனது என்பதும்,பம்பாநதியிலிருந்தே கியூ ஆரம்பித்ததும் உண்மைதான்.கடவுள் மேல் பாரத்தைப்போட்டுவிட்டுக் கிளம்பிவிட்டோம்...
காலை 5மணிக்குக் கிளம்பி மாலை தேக்கடி தாண்டி குமுளி போகிறோம்... திமிலோகப்படுகிறது...வண்டிகளின்அணிவகுப்பு... ஊர்வலம்தான்... நிலக்கல்மலை அடைந்தால் இந்தியாவின் அத்தனை பஸ்ஸூம் அங்கே இருப்பது போலிருந்தது!

அதைக்கடந்து சென்றால் எதிரே மூன்று மைல்நீளத்திற்கு வண்டிகள் நின்று கொண்டிருந்தன!திரும்பிவரவே இந்த லட்சணம்!நாளைக்கு நமக்கும் இதேகதைதான் என்று நினைத்துக்கொண்டோம்...செக்போஸ்ட்டில் சொல்லிகில்லி பம்பையில் வண்டியை பார்க் செய்ய பாஸ் வாங்கிவிட்டோம். இல்லையென்றால் 25 கி.மீ.லிருக்கும் இந்த நிலக்கல்மலையில்தான் பார்க் செய்யவரவேண்டும்.!

பம்பை வந்தால்...மக்கள் வெள்ளம்கூட இல்லை...சுனாமிதான்...ஒரே தலைகள்தான்...ஹரி சொன்ன ஆள் ``நீங்கள் அப்பாச்சி மேட்டுக்கு வந்துவிடுங்கள்,அங்கிருந்து அழைத்துச்செல்கிறோம்`` என்றார்கள்..அங்கே எப்படிச்செல்வது?பம்பை நதியிலேயே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள்,மலையில் எக்கச்சக்கமாக கூட்டம்.அவர்கள் இறங்கி வரவர இங்கிருந்து குழுகுழுவாக மேலே அனுப்பப்பட்டார்கள்.திருப்பதி போல குரூப்குரூப்பாக கயிறுகட்டி நிறுத்தப்பட்டிருந்தார்கள்.ஒரே அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது.போலீஸ்காரர்கள் அடிக்காத குறைதான். பாவம் அவர்கள் மட்டும் என்ன செய்வார்கள்?

மீண்டும் அர்ச்சிஷ்(மகன்) போய் ஒரு மாதிரியாக சொல்லி அந்த இடத்தைத் தாண்டினோம்.(அங்குதான் அன்று காலையில் கயிறு அறுந்துபோய் நெருக்கடியால் 20 பேருக்கு காயம்.ஒருவர் இறந்து போயிருந்தார்...)
மலை ஏற ஆரம்பித்தோம்..ஆஹா...``சுவாமியே...ஐயப்பா`` என சரணம் சொல்லத்தான் உடம்பில் ஏறும் மின்சாரம்...ஹரியின் பெண்கள்(சிறுமிகள்) இன்னும் சரணகோஷம் போடப்போட ஏறிக்கொண்டிருந்தோம்...கூடவே ஏறும் ஏராளமான கூட்டம்...அதேபோல இறங்குபவர்களும்...

நீலிமலை ஏற்றம் சிவபாலனும்` ஏற்றிவிட்டான்.அப்பாச்சிமேடு...அங்கேதான் ஹரி சொன்ன அன்பர் இருந்தார்.அவருமே பயந்துபோயிருந்தார்,எப்படிப் போகப்போகிறோம் என்று...மேலும் ஏற ஆரம்பித்தோம்.... சபரிபீடம்... ஆஹா...அங்கிருந்தே க்யூ ஆரம்பம்...க்யூ என்றால் ஏதோ வரிசையாக நிற்கவில்லை,ஆயிரம்,இரண்டாயிரம் பேர் ஒரு கயிறுக்குள் நிறுத்தப்பட்டிருந்தார்கள்!ஒரு இடைவெளிவிட்டு இன்னும் ஒரு கயிறு!இப்படியே போகிறது...எங்களை அழைத்துச்சென்றவர் ஆங்காங்கே நின்றிருந்த போலீஸிடம் சொல்லிச்சொல்லிச் செல்ல...நாங்களும் ஆடுகள் போல பின்னாடியே...ஒவ்வொரு பகுதியிலும் தலையில் இருமுடியோடு குழந்தை,குட்டிகளுடன் நெருக்கி அடித்துக்கொண்டு நிற்கும் கூட்டம்...மனதில் குற்ற உணர்வுடந்தான் போகிறோம்,என்ன செய்ய...

சரங்குத்திக்கு முன்பு கழுதைபாதையில் நுழைவதற்குள் படாதபாடுபட்டுவிட்டோம்...நடந்து சபரிமலையை அடைந்தால் கூட்டத்தை என்னவென்று சொல்ல?தலைக்கடல்தான்...ஒருபக்கம் க்யூவில் ஆயிரக்கணக்கான மக்கள்.அதன் வெளிப்பக்கம் இப்படி நின்று தரிசனம் செய்த களைப்பில் அங்கேயே படுத்துவிட்ட ஆயிரக்கணக்கான மக்கள்.இவர்களின் நடுவே எங்களைப் போல ஊர்ந்து செல்லும் ஆயிரக்கணக்கானவர்கள்... எங்களை அதுவரை அழைத்துச்சென்றவர்கள் அந்த இடத்தில் விட்டார்கள். படிக்கட்டு முழுக்க இருமுடி பக்தர்கள்.நான் ஒரு பெண்ணையும்,ஹரி ஒரு பெண்ணையும் பிடித்துக்கொள்ள கூட்டத்தில் நாங்களும் புள்ளியானோம்.ஒரே சரணகோஷம்...எதிரே தூரத்தில் பதினெட்டாம் படி...சுவாமியே சரணம் ஐயப்பா...!

இதோ எங்களையும் விட்டுவிட்டார்கள்...பாய்ந்துபோய் தேங்காயை உடைத்துவிட்டு,பதினெட்டாம் படியில் நெருக்கியடித்துக்கொண்டு நுழைந்தோம்.முதல் படியில் கால்வைத்துவிட்டால் போதும்,இரண்டு பக்கமும் நிற்கும் போலீஸ் நம்மைத் தூக்கி,தூக்கிவிட மேலே வந்துவிட வேண்டியதுதான்.

மேலே நடுவில் கோவில்...அதைச்சுற்றி மீண்டும் க்யூவரிசை...அதிலும் ஓட்டமும்,நடையுமாக முன்னேறினோம்.அப்போது மணி பத்தேமுக்கால். பதினோரு மணிக்கு நடை சாத்திவிடுவார்களாம்...முன்னேசென்றவர்கள் தரிசித்துக்கொண்டிருக்க எங்கள் பேட்ச் நிறுத்தப்பட்டது.எல்லோருக்கும் டென்ஷன் நடை சாத்திவிடுவார்களோ என்று நெருக்கித்தள்ளினார்கள். குழந்தைகளோடு நாங்களும் நசுங்கினோம்.யாரோ வந்திருந்ததால் மேலும் நேரம் நீண்டது.மேலும் நெருக்கல்.ஒருவழியாக க்யூவைவிட தபதபவென்று ஓட்டம்..நான் குழந்தையை இழுத்துக்கொண்டு வலதுஓரமாகவே ஊர்ந்துசென்றேன். காரணம் அப்படிப்போனால்தான் சன்னதி முன்பு சென்று சுவாமியைப் பார்க்கமுடியும்.இல்லையென்றால் கூட்டத்தின் நடுவில் மாட்டிக் கொண்டு எட்டிஎட்டிப் பார்த்துவிட்டு திருப்திபட்டுக் கொள்ளவேண்டியதுதான்.

ஆஹா..சன்னதிக்கு முன் வந்துவிட்டோம்..ஐயப்பனைப் பார்த்தேவிட்டோம்!பொன்வண்ணனாக `அந்தப் பையன்`என்னமாய் அமர்ந்திருக்கிறான்!மகிழ்ந்து கூட்டத்தில் தள்ளப்பட்டு வந்தால் அங்கே நின்றிருந்த ஹரி``ஒருநிமிஷம், குழந்தைகளை உள்ளே அனுப்புகிறேன் என்றார்கள்`` என்றார்.அந்த கேட்டில் நின்றிருந்தவருக்கு என்ன தோன்றியதோ,இரு குழந்தைகளையும் என்னையும் உள்ளே விட்டுவிட்டார்!சன்னிதி முன்பு படிக்கட்டுகளின் கீழ் நான்...உள்ளே சுவாமி தேஜோமயமாக!என்னவென்று சொல்ல...வார்த்தைகள் கடந்த அனுபவம்...கண்கள் குளிர தரிசித்துவிட்டு வந்தோம்.அதேபோல மஞ்சள்மாதா சன்னிதியிலும் உள்ளே மாட்டிக்கொண்டு அங்கேயே நின்றுகொண்டு நிறைய பேருக்கு பிரசாதம் வாங்கிக்கொடுக்கும் பாக்கியமும் கிடைத்தது.காலையில் நெய்யபிஷேகம்.விடு ஜூட் மெட்ராஸுக்கு...இரவு பன்னிரெண்டுக்கு சென்னை!

நினைத்துப் பார்க்கிறேன்,இதிலேஒரு இடத்தில் `மிஸ்ஸாகி`இருந்தாலும் இப்படி தரிசனம் கிடைத்திருக்குமா?நிலக்கல்லில் நாங்கள்தான் கடைசி வண்டி.அப்புறம் தடுத்து நிறுத்திவிட்டார்கள்.முதல்நாள் செம மழை அங்கு!காலையில் பம்பையில் கூட்டத்தில் மிதிபட்ட சம்பவம்.அங்கே தப்பித்து மேலே சன்னிதானம்.ஜஸ்ட் நடை மூடும்முன் தரிசனம்,அதுவும் மிக அருகில்!இத்தனை அமர்க்களங்களுக்கும் நடுவில் எப்படி இப்படி ஒரு தரிசனம் சாத்தியம்.?எல்லா இடத்திலும் தப்பித்து,தப்பித்துப் போயிருக்கிறோம்!

கிளம்புவதற்கு முதல்நாள் ஈஷாவின் ஆனந்தமழையில்,அலையில் வேறு நனைந்து வந்தேன்...அவர் கொடுத்த எனர்ஜி,அதனோடு சபரிமலைக்குப் பயணம்...அங்கு மந்திரமாய் நிற்கும் பதினெட்டுப்படியைக் கடக்கும் அனுபவம்..குட்டிப்பையனின் கிட்ட தரிசனம்...

யார் சொன்னார் இங்கு கடவுள் இல்லையென்று?சொல்லிவிட்டுப் போகட்டும்...பாவம்,அவர்களுக்கு இந்த ஆனந்தானுபவம் கிடைக்காது...
பல சமயங்களிலும் கிடைத்த தெய்வீகக்களிப்பு மீண்டும் கிடைத்ததடி தங்கமே தங்கம்....!