Tuesday, November 30, 2010

நானும் அண்ணாமலையானும் மட்டும்...?

எட்டு வருடங்கள் தொடர்ந்து கிரிவலம் போய்க்கொண்டிருந்தேன்.அப்புறம் என்னவோ அப்பப்போ தடங்கல்கள்.இந்த கார்த்திகை தீபத்திற்கு போயேதீருவது என அடம்,ஆனால் தீபம் ஏற்றும் அன்று அல்ல.கூட்டம் நெரியும்.ரெண்டு நாள் கழிந்தால் ஆனந்தமாக தீபத்தைப் பார்த்துக் கொண்டே நடக்கலாம்.என்னை மாதிரி நிறைய பேர் வருவார்கள்.ஆனால் அப்போதும் போக முடியவில்லை.நேற்றுதான் போகமுடிந்தது.
போய் சேர்ந்தாயிற்றே தவிர மனசுக்குள் பயம்.கோயில்,ரமணாசிரமம்,பஸ்ஸ்டேண்ட்,கிருஷ்ணகிரிக்குப் பிரியும் சாலைவரை பிரச்னை இல்லை.மனிதர்கள் நடமாட்டம் இருக்கும்.அப்புறம் கிரிவலப் பாதையில் யாருமே இல்லையென்றால்...?இந்தமாதிரி சமயங்களில்தான் பெண்ணாக இருப்பதன் கஷ்டம் தெரியும்.இதுவே ஆம்பிளையாக இருந்தால் வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு போய்க்கொண்டே இருக்கலாம்.எத்தனை வயதானால் என்ன,பெண் தனியாகப் போவதற்கு யோசிக்க வேண்டியதாகத்தான் உள்ளது.
இப்படியெல்லாம் சிந்தித்துக்கொண்டு போனேன்.எனக்குள் ஒரு குரல்...`அண்ணாமலையானே உன் பக்கத்தில் முழுவதும் இருப்பான்.நீயும் அண்ணாமலையானும் மட்டும்!அவன் அருள் மொத்தம் உனக்கே!இது மாதிரி கிடைக்குமா...?அதை எஞ்சாய் பண்ணேன்,`
சரிதான்,நினைத்தாலே அற்புதமாகத்தான் இருக்கு! நானும் அவனும்,அந்த அற்புத சூழலும்!ஆனாலும் நான் அவ்வளவு பக்தை இல்லையே! த்ரௌபதியின் சேலையை இழுத்தபோது,அவள் மார்போடு சேலையைப் பிடித்துக் கொண்டிருந்தவரை கண்ணன் வரவில்லை.கையைத்தூக்கி``இதயவாசா``என சரணாகதி அடைந்தபிறகுதான் வந்தான்.அந்த மாதிரி சரணாகதிபக்தியெல்லாம் என்னிடம் ஏது?பக்கத்தில் அண்ணாமலையே இருந்தபோதும் நான் சென்ற காரை ஆங்காங்கே பாயிண்ஸில் வந்து இருக்கச் சொல்லிவிட்டுத்தான் கிளம்பினேன்.
ஆனால்...
ஆங்காங்கே ஒருசிலர் நடந்துகொண்டுதான் இருந்தார்கள்.பஸ்களும்,லாரிகளும் போய்க்கொண்டு இருந்தன.ஸோ,மனித நடமாட்டம் இருந்தது.அதேசமயம் நிறையபேரும் இல்லை,துணைக்கு,கண்பார்வைக்கு மட்டும்  மனிதர்கள்!இப்படித்தான் மனம் விரும்புகிறது.
சரியாக ஆறு மணிக்கு மலையுச்சியில் தீபம் தெரிந்தது.ஆஹா,என்ன காட்சி!நான் ஆஞ்சனேயர் கோயிலருகே போய்க்கொண்டிருந்தபோது தீபதரிசனம்...அப்படியே விழுந்துவணங்கினேன்.அப்புறம் ``அருணாசலசிவ,அருணாசலசிவ...``என்று சத்தமாக பாடிக்கொண்டே ந்டநதேன்...ஆங்காங்கே எங்கோ சில பேர்தானே,அதனால் ஆனந்தமாக பாட முடிந்தது.ஆனந்த அனுபவம்தான் போங்கள்...யார் இருப்பார்களோ,மாட்டார்களோ என்ற பயமெல்லாவற்றையும் போக்கி ஆனந்தத்தை அளித்துவிட்டான் அண்ணாமலை...

Sunday, November 28, 2010

பிரபுசாலமனும், பகவத்கீதையும்...

இது என்னடா வம்பான தலைப்பா இருக்கேன்னு தோணுதா?
எப்போ விஜய்டி.வி.யைத் திருப்பினாலும் ஒரு ப்ரோக்ராம் கண்ணில் பட்டுக் கொண்டே இருந்தது.அதிகம் வெளிச்சத்துக்கு வராத நிறைய நட்சத்திரங்கள் பேசியது.
ஒரு கட்சி உழைப்பு,கடுமையான உழைப்பு இருந்தால் முன்னுக்குவரலாம் என்றார்கள்.இன்னொரு கட்சி நாங்களும்தான் கடுமையாக உழைக்கிறோம்,ஆனால் அதிர்ஷ்டம் இருக்கணும் சாமீ என்கிறார்கள்.
ஒருத்தர் நான் பத்துவருஷம் போராடினேன்,அப்புறம் என் முயற்சியால்தான் வாய்ப்பு வந்தது என்பார். எதிரணி அதான் உங்க அதிர்ஷ்டம் என்பார்.இப்படியே மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.இதிலே ப்ரபு சாலமன்,நித்யா இப்படி நிறைய பேர்.நீயா,நானா கோபிநாத்தும் தலைப்பை விட்டுப் போய்விடக்கூடாதென்று இதையேதான் பேசிக்கொண்டிருந்தார்.
ஆனால் இடையில் ஒரு அருமையான கருத்து வந்துவிழுந்தது.அதை ப்ரபுசாலமனோ அல்லது அங்கிருந்த வேறு யாரோ சொன்னார்கள். அதற்குத்தான் வருகிறேன்.
``என்னுடைய படைப்புகள் தொடர்ந்து தோல்வியாகவே ஆகிக்கொண்டிருந்தது.நான் யோசித்தேன். என்னை அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று நான் நொந்துகொள்ளவில்லை. எங்கே தவறு செய்கிறேன் என்று அலசினேன்.என்னை நானே ஆராய்ச்சி செய்தேன்.அந்தத் தவறுகள் இல்லாமல் இப்போது படம் எடுத்தேன். இதோ வெற்றி கிடைத்தது.``
இதைத்தான்`செல்ஃப் அனலைசேஷன்` செய்துகொள்`` என்று கீதையில் க்ருஷ்ணன் சொல்கிறார்.பகவத்கீதை என்றவுடன் எல்லாரும் விழுந்தடித்துக்கொண்டுஓடிவிடுகிறார்கள்,ஏதோ ப்ரீச் பண்ணவந்தாப் போல. உண்மையில் பகவத்கீதை என்பது சுயமுன்னேற்றநூல்.உலகில் எந்த ஃபாரின் ப்ரொபசரும் சொல்லாத அற்புதமான வழிகளை சொல்லியிருக்கிறார்.
அவரை பகவானாக பார்க்கவேண்டாம். ஒரு பெரும் சாம்ராஜ்யத்திற்காக இந்த நாடே இரண்டாக பிளவுபட்டுக் கிடந்தபோது அத்தனைபேரையும் மிகச் சாமார்த்தியமாக வழி நடத்திச் சென்றவனாக பார்க்கலாமே!அவன் வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட நிலையிலும் மகோன்னதமாக எப்படி வெற்றி பெறுவது என்பதைச் சொன்னவன்.
(சொல்லப்போனால் ஒரு இடத்தில் கூட சிவன்,விஷ்ணு,அம்மன் என எந்த தெய்வத்தையும் குறிப்பிடவில்லை.முழுக்க,முழுக்க வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி என்று பேசும் நூல்.)
அதிலே உன்னை நீ அறிந்துகொண்டால் வெற்றிபெறுவாய் என்று பேசுகிறார்.எதைச்செய்தாலும் என்ன கிடைக்கும் ,என்ன கிடைக்கும் என்று அலையாதே, உனக்கு எதைச்செய்ய விதித்திருக்கிற்தோ அதை முழுமனதோடு செய்.``என்கிறார்.
வெளிநாட்டுப் புத்தகங்களையெல்லாம் விழுந்து விழுந்து படிக்கும் ஆர்வலர்கள் ஒருமுறை கீதையைப் படித்துப் பாருங்கள்.நிறைய அற்புதமான விஷயங்கள் கிடைக்கும்.
சரி,பிரபுசாலமன்&மற்றவர்கள் பேசிய விஷயத்திற்கு வருவோம்.அங்கே பாவம் மிகப்பலரும் நல்ல திறமை இருந்தும் ஜொலிக்கமுடியாத நட்சத்திரங்களாகவே இருந்தார்கள்.
இவர்களும் தங்களைத் தாங்களே அலசிக்கொண்டால் மேல் நிலைக்கு வருவார்களோ!
ஆக மொத்தம் சிந்திக்கவைத்த நிகழ்ச்சி.
`

Friday, November 26, 2010

மங்கையர்மலரை ஏன் விட்டுவிட்டேன்?

அது ஆச்சு ஏழு வருஷங்கள்,ம.ம.விட்டு.ஆனாலும் இன்னும் என்னைப் பார்க்கிறவர்கள்,கடிதம் எழுதுகிறவர்கள் கேட்டுக் கொண்டே இருக்கும் கேள்வி இது.அந்த அளவுக்கு என் வாழ்வில் கலந்த விட்ட ஒன்றாக ஆகிவிட்டது.
விட்ட புதுசில் சொல்லணும் என்று ஆரம்பித்திருந்தால் ஏதேதோ சொல்லியிருப்பேன்.என் மனக்குறைகளையெல்லாம் சொல்லி இருப்பேன்.சொல்வதற்கும் ஒரு வண்டி மேட்டர் இருந்தது.
ஓரிரு வருஷங்கள் கழித்துச் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தால் வேறு மாதிரி சொல்லியிருக்கலாம்.அப்போ மனம் கொஞ்சம் சமாதானமடைந்து விட்டது.
இப்போது யோசிக்கும்போது பல விஷயங்கள் தெளிவாகிறது.ஒரு காட்சியை மிக அருகில் பார்க்கும்போது அது மட்டுமே தெரியும்.கொஞ்சம் தள்ளி வைத்தால் பக்கத்தில் இருப்பவையும் தெரியும். இன்னும் கொஞ்சம்,இன்னும் கொஞ்சம் என்று தள்ளி வைத்துப் பார்த்துக்கொண்டே போனால்,அதாவது `லாங்ஷாட்` என்று சொல்வார்களே, அந்த மாதிரி பார்த்தால் முழு பின்புலமுமே புலப்படும்.அப்படித்தான் இப்போது தோன்றுகிறது.

அந்த காலகட்டம் தகவல் மீடியாவில் மிகப் பெரும் மாறுதல்களை கண்ட சமயம்.
மஹாபாரதம் முடியும் சமயம் கலியுகம் தொடங்கியதாம்.அதன் தாக்கங்களை கௌரவர்களிடமும் பார்க்கமுடிந்ததாம்.அதைப்பற்றிய பல சுவாரஸ்யமான கதைகள் உண்டு. அதைப் பிறிதொருசமயம் பகிர்ந்துகொள்கிறேன்.
அதுமாதிரி இந்த காலகட்டத்தில்தான் கொள்கை, லட்சியம் என்றெல்லாம் கனவு கண்ட இளைஞர் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போனார்கள்.யதார்த்த வாழ்வில் பணம்,பணம் அதுதான் ரொம்பவுமே முக்கியமானது என்று ஓட ஆரம்பித்த ஆண்டுகள். இது இளைஞர்களின் தவறு அல்ல.பெற்றோர்கள்,அவர்களுக்கும் காலத்தின் நிர்பந்தம்.
அனேகமாக பார்த்தால் எல்லா மீடியாக்களின் முகங்களுமே மாற ஆரம்பித்துவிட்டது.
அதற்கேற்றார் போல அங்க இருப்பவர்களும்.சோகமாகவோ,லட்சியவெறியிலேயோ தாடி வைத்த இளைஞர்கள் காணாமல் போனார்கள்.அதேபோல பெண்களும்.
இவையெல்லாம் காலத்தின் கட்டாயம்.இந்த மாறுதல்களில் எவ்வளவோ நன்மை இருக்கிறது.தீமையும் இருக்கிறது.இரண்டும் கலந்ததுதானே வாழ்க்கை?
சரி ,என் விஷயத்திற்கு வருவோம்...
நடந்தது எல்லாம் சரிதான், இதுதான் எல்லோருக்கும் நல்லது என்று தோன்றுகிறது.குறையொன்றுமில்லை கோவிந்தா... 

Monday, November 22, 2010

ஒரு மாலைப் பொழுதில்...

இது கொஞ்சம் பேச சங்கடமான விஷயம்தான்.ஆனால் அந்தப் பெண்மணியின் பரிதாபமான முகம் பேசவைக்கிறது.
மாலையில் என்னோடு நடைப்பயணம் அதான் வாக்கிங் வருபவர்.ஒரு பிரபலமானவரின் மனைவி,பெயர் வெண்டாமே பாவம்...இனி அவர் வார்த்தைகளிலேயே...
``இவரும் நானும் ஒன்றாக வளர்ந்தவர்கள்.என் அத்தைப் பையன்தான்.சின்ன வயசிலேந்தே இவந்தான் உன் புருஷன் அப்படிம்பாங்க.சரின்னுட்டேன்.அவருக்கும் அப்படித்தான்.கல்யாணம் ,குழந்தை எல்லாம் நடக்கத்தான் நடந்தது.என்னன்னா அவருக்கும் எனக்கும் ஒரு வயசுதான் வித்தியாசம்.இது அப்போல்லாம் தெரியலை.இப்போ எனக்கு அறுபது.எல்லாம் ஆஞ்சு ஓஞ்சு அக்கடான்னு கிடக்கமாட்டமான்னு இருக்கேன். ஆனா அவருக்கு இப்பதான் என்ஞாய் பண்ண நேரம் கிடைச்சிருக்கு.வயசு காலத்துலே ஆபீஸ் வேலையா ஓடிக்கிட்டே இருப்பார்.பலநாட்கள் வெளியூர் கேம்ப்தான்.நான் குழந்தைகளோடு கெடப்பேன்.
இப்போ எல்லாம் முடிஞ்சு போச்சு.ரிடையர்டு லைஃப்தானே...ஆனா நாந்தான் இப்போ மாட்டிக்கிட்டேன்.எனக்கு அவரோட ஜாலி லைஃப்லே ஈடு கொடுக்க முடியல.இந்த வயசுலே எந்திரன் பார்த்து கைதட்ட என்னால் முடியல. இந்த மாதிரி நிறைய விஷயங்கள்.வீட்டுக்குள்ளே எப்பவும் ஒரு மோனயுத்தம்தான்.வெளிநாட்லே இருக்கிற பசங்களுக்கு இதெல்லாம் தெரியாது.நாங்க சந்தோஷமா இருக்கிறதாதான் நினைச்சிகிட்டு இருக்காங்க.அது சரி இதையெல்லாம் புள்ளைங்ககிட்ட பேசமுடியுமா?``
சரி,அவர் என்ன சொல்ல வர்றார்? அவரே சொல்றார், கேளுங்க...
``இது எல்லாத்துக்கும் காரணமா நான் நினைக்கிறது எங்களுக்குள்ள வயசு வித்யாசம் இல்லை என்பதுதான்.பெண் சீக்கிரம் ஓய்ஞ்சு போய்டறா.ஆனா ஆணுக்கு வயசு ஆகஆகத்தான் எல்லா ஆசையும் ஏறுது.என் கணவரை நான் தப்பு சொல்லமாட்டேன்.பாவம் அவர் என்ன செய்வார்?இயற்கை அந்த மாதிரி படைச்சிருக்கு.
நான் நினைப்பேன்,இதனாலதான் பெரிய மனுஷங்கள்ளாம் `சின்ன வீடு` வெச்சுக்கறாங்க போலருக்கு.அந்த பொண்ணு வயசு கொறச்சலாத்தானே இருக்கும்?அப்ப `பெரியவீடு` நிம்மதியா இருக்கலாம்.``
நாங்க ரெண்டுபேரும் சிரிச்சுட்டோம்.சரி,வேறு என்ன பண்ண? அவர் தொடர்ந்தார்...
``ஆனா நம்பள மாதிரி இருக்கிற மிடில் க்லாஸ்ஃபேமிலி எல்லாம் என்ன பண்ண முடியும்?அப்படியே நாட்களை ஓட்ட வேண்டியதுதான்.
எதுக்கு சொல்ல வர்றேன்னா இந்த காலத்து பொண்டுக வர்ற மாப்பிள்ளை பையனுக்கு அதிக வயசு வித்யாசம் இருக்கக்கூடாதுன்னு சொல்லுதுங்க.அதுங்ககிட்ட எப்படி இதை சொல்றது?அந்த காலத்துல பத்து வயசு வித்தியாசத்துல பண்ணாங்க.என்னைக் கேட்டா அதுதான் கரெக்டுன்னு சொல்வேன்.நீங்க இத பத்தி எழுதுங்களேன்...`` என்றார்.
இதோ எழுதிவிட்டேன்.நீங்க என்ன சொல்றீங்க?...

Sunday, November 21, 2010

ரொம்ப நாளாக நடந்துகொண்டிருக்கிறேன்.கூட வ்ந்தவர்கள் நிறையபேர்.விட்டுவிட்டுப் போனவர்கள் நிறையபேர்.இன்றுவரை இருப்பவர்கள் கொஞ்சம்பேர்.ஊருக்குப்போய் கடிதம் போட்டவர்கள் கொஞ்சம் பேர்.
எத்தனை வகை மனிதர்கள்!
நடந்துகொண்டு இருக்கிறேன்...